என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி  விவசாயிகள் போராட்டம்
    X

    கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

    • கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள், விவசாய சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியும், சட்டை மற்றும் சேலைகளில் கருப்பு பேட்ச் அணிந்தும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் கூட்டத்தை துவங்கி வைத்ததும் பேசிய விவசாயிகள், கறிக்கோழி பண்ணை கூலி உயர்வு தொடர்பாக அறவழியில் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோரிக்கைகளை முன்வைத்தும் கண்ணில் கருப்பு துணி கட்டி வந்ததாகவும், தமிழக அரசு உடனடியாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் கூறுகையில்,

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பிற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கறிக்கோழி வளர்ப்பிற்கு தற்போது வரை 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்து சிறையில் அடைத்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×