என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
- கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார்.
- நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மதுரை:
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டிலேயே அர சாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக தெருக்கள் சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவுபடுத்துவதன் நோக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.
இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதன்மூலம் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






