என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்
    X

    முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

    • பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலேயே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பின.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் தண்ணீர் வரத்து இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்பு ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை அணையில் இருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய்களில் பாசனத்திற்கு 1430 கன அடி, குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் 1499 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.78 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து 2287 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5771 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 18ந் தேதி அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தது. ரூல்கர்வ் விதிப்படி அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழை அளவும் குறைந்ததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் சரியத் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4037 கன அடியாக உள்ள நிலையில் 1822 கன அடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    இதன் காரணமாக பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 9 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.80 அடியாக உள்ளது. நீர் வரத்து 84 கன அடி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அரிசிப்பாறையில் தொடர் மழை காரணமாக கடந்த 18ந் தேதி முதல் சுருளி அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் இன்று 8-வது நாளாக தடை நீடிக்கிறது. இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 15-வது நாளாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியிலும் தடை தொடருகிறது.

    சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள், அருவிக்கு செல்லும் சிமெண்டு படிக்கட்டுகள் சேதம் அடைந்தன. அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சேதம் அடைந்த இரும்பு கம்பிகள், படிகள் சீரமைக்கப்படும் என்றும் அதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 24.2, தேக்கடி 9.8, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம், கூடலூர் பகுதியில் தலா 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×