என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அணு ஆயுதங்களால் கூட இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பை அழிக்க முடியாது - திருமாவளவன் ஆதங்கம்
- அணு ஆயுதங்களால் கூட அழிக்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.
- தன்னைச் சங்கராச்சாரியராக ஆக்க வேண்டாம் என்றும், சகோதரனாக ஏற்றுக்கொள்ளவே தான் கேட்பதாகவும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான விசிக விருது வழங்கும் விழாவில் நேற்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.
திருமாவளவன் தனது உரையில், சனாதன சக்திகள் தமிழ் மண்ணை விஷமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டு அரசியல் களம், "சனாதன சக்திகளா அல்லது விடுதலைச் சிறுத்தைகளா" என்ற இரு துருவங்களுக்கு இடையே உள்ள போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது எஎன்று கூறிய அவர், மதவாத அரசியலை நோக்கித் தமிழ்நாட்டைத் திசை திருப்பப் பலர் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
மேலும், "மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செயல்படுவதால், அது மதச்சார்பின்மையை மேலும் கூர்மைப்படுத்துகிறது . நாட்டில் அமையவிருக்கும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், ஆனால் பாஜகவோ அரசமைப்பை அழிக்க நினைக்கிறது.
நமது இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரங்களுக்காக இல்லை, ஒருநாள், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கூட அறிவிக்கக்கூடும். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை, பிளாஸ்டிக் சேர் அல்லது தரையில் கூட அமரத் தயங்க மாட்டேன்.
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகே இந்து மதம் உருவானது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது, ஆனால் இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட அழிக்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
திருநீறை அழித்தது குறித்துப் பேசுபவர்கள் தன்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கில் திருநீறு பூசவில்லை என்றும், அதை அவமதிக்கும் நோக்கில் அழிக்கவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். தன்னைச் சங்கராச்சாரியராக ஆக்க வேண்டாம் என்றும், சகோதரனாக ஏற்றுக்கொள்ளவே தான் கேட்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.






