என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்- வாகனத்துடன் டிரைவர் கைது
    X

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்- வாகனத்துடன் டிரைவர் கைது

    • சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கியூபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன் பிரம்ம நாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா, கேப்ரியல் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இரவு முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் காயல்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த லோடு வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் சாத்தான்குளம் சவுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட டிரைவர் ஆகியோர் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும்.

    Next Story
    ×