என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'முன்கூட்டியே கர்ப்பமானால் தான் திருமணத்தன்று குழந்தை பிறக்கும்' - தி.மு.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
- விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.
- அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டுக்கொள்வதற்கு அரசாணை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார். விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-
அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.
"அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடித்த உடனேயோ குழந்தை பிறக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும். எனவே, அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும் வரை சற்று காத்திருக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி.யின் பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற மக்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்த நிலையில், தி.மு.க. எம்.பி.யின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.






