என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் நேரில் ஆஜராக சம்மன்
- ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
- செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ரெயில்வே கேட் கீப்பர் தூங்கிதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரெயில் வருவதாக விமல் என்ற அதிகாரி பங்கஜ் சர்மாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பங்கஜ் சர்மா போனை எடுக்கவில்லை.
அவர் தூங்கி விட்டதாக அதிகாரியிடம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவர் கூறும்போது, செம்மங்குப்பம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது, 5 அல்லது 10 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும்.
செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் தகவல் தொடர்பாக அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.
இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக நேரில் ஆஜராக 13 பேருக்கு திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
பள்ளி வேன் டிரைவர் சங்கர் உள்பட 13 பேரும் நாளை திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






