என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில் தொடர் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    கல்லட்டி மலைப்பாதையில் மரம் விழுந்து கிடந்ததை காணலாம்.

    நீலகிரியில் தொடர் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
    • அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து கடந்த 6 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கொட்டிய கனமழைக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் முறிந்து விழுந்துள்ளன. சாலைகள், குடியிருப்பை யொட்டிய பகுதிகள் என பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

    இன்றும் தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    நேற்று பெய்த மழைக்கு, ஊட்டி நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட குருத்துக்குளி, பசவகல் பகுதிகளில் 7 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும், தங்குவதற்கு போதிய இட வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

    ஊட்டி-கூடலூர் சாலையில் தவளமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தவளை மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் மரங்களின் இடுக்கில் சிக்கியுள்ளதையொட்டி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கோட்ட பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலைத்துறை) செல்வன், உதவி கோட்ட பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலைத்துறை) எழிலரசன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) முகமது ரிஸ்வான், நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் உடன் இருந்தனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. 6 நாட்களாக பெய்து வரும் மழையால் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுப்பாறையில் மரம் முறிந்து விழுந்ததால் 6-வது நாளாக அந்த கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

    கடந்த ஒரு வார காலமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். காந்தி நகர் பகுதியில் நேற்று ஒரு மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை மக்களே வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இடைவிடாது பெய்து வரும் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது. மழையுடன் கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-114, அப்பர் பவானி-102, பந்தலூர்-65, சேரங்கோடு, நடுவட்டம்-52, ஓவேலி-48, கூடலூர், எமரால்டு-49, அப்பர் கூடலூர்-46, கிளைன் மார்கன்-44, குந்தா-43, பாடந்தொரை-37, செருமுள்ளி-36, தேவாலா-31.

    Next Story
    ×