என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம்- முதலமைச்சர் வெளியிட்டார்
- மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது.
- தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை இன்று வெளியிட்டார்.
மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக் கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 -தனை அறிமுகப்படுத்தியது.
இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்த்திடும் வகையில், ஒன்றிய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத்தொகை வழங்கிட இந்த திட்டம் வழிவகை செய்யும். இதன்மூலம், தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






