என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேகவெடிப்பால் சென்னையில் கனமழை - ஜெர்மனியில் இருந்து கேட்டறிந்த முதலமைச்சர்
- இரவு 10 மணி முதல் 12 மணி வரை குறுகிய நேரத்தில் அதிகமழை பெய்தது.
- பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. அதன்பிறகு சற்று ஓய்ந்திருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. அதிலும் இரவு 10 மணி முதல் 12 மணி வரை குறுகிய நேரத்தில் அதிகமழை பெய்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, மேக வெடிப்பு காரணமாக சென்னையில் மழை பெய்ததாகவும், நேற்று இரவு 10 மணி முதல் 12மணி வரை பலத்த மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பம், இரவு நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை என்பது அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு பெய்த மழை குறித்து ஜெர்மனியில் இருந்து தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், மழையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






