என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- தென்மேற்கு வங்கக்கடலின் மேல்பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- காரைக்கால் பகுதியில் மாலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மாலையிலும் நல்ல மழை பெய்தது. மாலை 6 மணிக்கு பிறகு சென்னை மாநகர் முழுவதும் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
சென்னை மாநகர பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், பாரிமுனை, கோயம்பேடு,அண்ணா நகர், முகப்பேர், அயனாவ ரம் வில்லிவாக்கம், அசோக் நகர், மயிலாப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும். புற நகர் பகுதிகளான செங்குன் றம் சோழவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் இரவில் பெய்ய தொடங்கிய மழை விடியவிடிய பெய்தது.
இன்று காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னையில் 17 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி போக்குவரத்தை சீராக்கினார்கள்.
இந்நிலையில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலின் மேல்பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று மாலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளையில் இருந்து 2 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமாக மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






