என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு- உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
- திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
- சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபடவும், மலையின் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று புத்தாண்டையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சபரிமலை சீசனையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் இன்று திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.






