என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கில் நேரில் ஆஜர்: 5 போலீஸ்காரர்களின் காவல் நீட்டிப்பு
- சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.
- வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறப்பு தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களை காவலில் எடுக்க முடிவு செய்து, இது தொடர்பான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வந்த பின் சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 5 போலீஸ்காரரின் காவலை ஆகஸ்டு 13-ந்தேதி நீட்டித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






