என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும்- நடிகர் சிவகுமார்
    X

    மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும்- நடிகர் சிவகுமார்

    • தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.
    • எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அதே 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி கோவை இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    திரைப்படத் துறையில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மேடையிலே பேசிய நான் நமது இன்றைய முதலமைச்சரை பார்த்து இன்று மஞ்சள் துண்டு போர்த்தப்பட்டு நாளை தமிழக முதலமைச்சராக போகின்ற அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்டு பேசினேன்.

    அந்த வாழ்த்து பொய்யாகவில்லை. அடுத்த 3 ஆண்டுக்குள் 2021 ஏப்ரல் 7-ந்தேதி இதோ இங்கு முதலமைச்சராக நம்மிடையே வந்து அமர்ந்துள்ளார்.

    தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு உங்கள் சார்பில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த விருதை எனக்கு வழங்கிய இந்த பல்கலைக்கழகத்துக்கு இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் சிறுவயதில் இருந்து அதிகமாக சினிமாக்கள் பார்த்ததில்லை. 14 வயது வரை நான் பார்த்த மொத்த படங்கள் வெறும் 14 தான். அதில் மறக்க முடியாத படங்கள் பராசக்தி, மனோ கரா, இல்லறம், இல்லற ஜோதி, ராஜாராணி போன்ற படங்கள். அந்த படங்களில் கலைஞர் வசனங்களை 15 வயதிலே மனப்பாடம் செய்து விட்டேன்.

    கலைஞர் என்னிடம் நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதவில்லை தம்பி. எழுதி பாஸ் செய்தால் ஐ.ஏ.எஸ். போகச் சொல்வார்கள். எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. அதனால் பரீட்சை எழுதாமல் தவிர்த்தேன் என்று என்னிடம் சொன்னார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத ஒரு இளைஞன், சங்க இலக்கிய பாட்டுக்கு உரை எழுதி உள்ளார். அவரது வசனம் கற்பனையே பண்ண முடியாது. அந்த அளவுக்கு அமைந்துள்ளது.

    அந்த இலக்கிய தாத்தாவுக்கு மகனாக பிறந்து இதோ மேடையில் இருக்கிற அவரது வாரிசு, இன்றைக்கு திறம்பட ஆட்சி செய்து காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், வீடுதேடி மருத்துவம் என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் மீண்டும் இந்த பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.

    இவ்வாறு சிவக்குமார் பேசினார்.

    Next Story
    ×