என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்- முகாம்களில் இன்றும் பொதுமக்கள் திரண்டனர்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்- முகாம்களில் இன்றும் பொதுமக்கள் திரண்டனர்

    • வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
    • சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த நவ.4-ந்தேதி முதல் டிச.14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005-ம் ஆண்டு காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.

    வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்ப்பதற்கு கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து கடந்த 2-ந்தேதி வரையில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து 9575 பெயரை நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளிலும்,அதற்கு அடுத்த வாரம் 17, 18 ஆகிய தேதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 18-ந்தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியாது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

    Next Story
    ×