என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணியின் போது கிடைத்த 3 மனித எலும்புகள்- போலீசார் விசாரணை
- தோண்டப்பட்ட மண்ணை, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரப்பும் பணி நடைபெற்றது.
- போலீசார் கூறுகையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையின் நடுவே மண் தோண்டப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக பணி நடைபெற்று வருகிறது.
இங்கு 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பணி தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பணி மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் தோண்டப்பட்ட மண்ணை, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரப்பும் பணி நடைபெற்றது.
அப்போது, அங்கு எலும்பு இருந்ததை கண்டதொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஜூஜூவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், 3 மனித எலும்புகள், பேண்ட் ஒன்றும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அங்கு கிடந்த தொடை எலும்பு மற்றும் கை பகுதி எலும்புகளை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஒப்பந்ததாரர் ஜல்லி கற்களை அங்கிருந்து இடமாற்றிய போது அதற்குள் 3 மனித எலும்புகள், மற்றும் பேண்ட் ஒன்றும் இருந்தது தெரியவந்தது.
மனித எலும்புகளை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த இடத்தில் பிணமாக கிடந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறோம். ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காணாமல் போனவர்கள் குறித்தும், பாலம் அமைக்கும் பணியாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.






