என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3 மாவட்ட பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்
    X

    3 மாவட்ட பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்

    • பா.ஜ.க.வின் 2-வது பூத் கமிட்டி மாநாடு வருகிற 21-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
    • இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமை வகிக்கிறார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தலுக்காக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி இதில் பங்கேற்கும் கட்சியினர் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தது.

    அதேபோல் அ.தி.மு.க.வும் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டை நடத்தி முடித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியான பா.ஜ.க. சார்பிலும் முதலாவது பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நெல்லையில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் 2-வது பூத் கமிட்டி மாநாடு வருகிற 21-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் பணி தொடங்கி மாநாட்டு மேடை அமைக்கும் விறுவிறுப்பாக பணி நடைபெற்று வருகிறது.

    3 பாராளுமன்ற தொகுதிகள், 21 சட்டமன்ற தொகுதிகள், கட்சி ரீதியாக 6 மாவட்டங்களை உள்ளடக்கிய திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பூத்கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வருகிற 21ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமை வகிக்கிறார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்புரையாற்றுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பொறுப்பாளர் சுதர்சனரெட்டி, தமிழக தேர்தல் பார்வையாளர் அரவிந்த்மேனன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விலகி விட்டனர். அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை ஏற்படுத்தினால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என தெரிவித்து வருகிறார். இதுபோன்ற சூழலில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களையும் ஒன்றிணைந்த அ.தி.மு.க.வையும் ஏற்படுத்த தேசிய நிர்வாகிகளிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×