என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவர்களின் கவனத்திற்கு... நாளை மறுநாள் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
    X

    மாணவர்களின் கவனத்திற்கு... நாளை மறுநாள் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

    • தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வருகிற 9-ந்தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினார்கள். 3 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்களும் 4 லட்சத்து 24 ஆயிரம் மாணவிகளும், தனித் தேர்வர்கள் 18 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 145 பேரும் எழுதினார்கள்.

    விடைத்தாள்கள் கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் விடைத்தாள்களை கவனமாக திருத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மதிப்பெண் விவரங்களை டேட்டா என்ட்ரியில் பதிவு செய்யும்போது பிழைகள் இல்லாமல் பதிவேற்றம் செய்யவும் ஊழியர்களுக்கு தேர்வுத்துறை கூறி இருந்தது.

    அதன் அடிப்படையில் அனைத்து பணிகளும் நிறைவுற்று தேர்வு முடிவினை அறிவிப்பதற்கு அரசு தேர்வு துறை தயாராக இருந்தது. பிளஸ்-2 தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியிடப்படும் என்று கல்வித்துறை அட்டவணைப்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்னதாக 8-ந்தேதி தேர்வு முடிவுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து அனுமதி கேட்டார். நாளை மறுநாள் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்வு முடிவுகளை வெளியிட முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார்.

    அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு முடிவு 8-ந்தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளை 8-ந்தேதி காலை 9 மணிக்கு கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

    தேர்வு முடிவுகளை https/results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

    மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். இது தவிர மாணவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும்.

    Next Story
    ×