என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி கோவிலில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்
- பள்ளி மாணவிக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் பழக்கம் ஏற்பட்டது.
- கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
கும்மிடிப்பூண்டி:
புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த 14 வயது மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் (22) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். மேலும் மாணவிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி, காதலன் லோகேசுடன் திண்டிவனத்தில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் லோகேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை திருத்தணி கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் திருப்பூர், திண்டிவனம் சென்று தங்கி உள்ளனர்.
மாணவியை திருமணம் செய்த லோகேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






