என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெருந்துறையில் காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
    X

    பெருந்துறையில் காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை

    • சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.
    • காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா (57). இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என 2 மகன்களும், மீனா, வனிதா என 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் ராஜா கடந்த 6 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். மூத்த மகன் வெங்கடேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார்.

    இதையடுத்து சாந்தா தனது 2-வது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சாந்தாவும், கார்த்திக்கும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். பின்னர் கார்த்திக் பெருந்துறையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சாந்தாவுக்கும், அவரது மகன் கார்த்திக்குக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சாந்தாவும், கார்த்திக்கும் இரவில் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதிகளில் தங்குவது வழக்கம். இரவில் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கி விடுவார்கள். சாந்தா அவ்வப்போது கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள இளைய மகள் வனிதா வீட்டிற்கு சென்று வருவார்.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சாந்தா குடிபோதையில் வனிதா வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்நிலையில் இரவு 11 மணி அளவில் கார்த்திக் தனது தங்கை வனிதா வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு வனிதா அவரது கணவர் வேலன் ஆகியோர் கதவை திறந்து வெளியே வந்து கார்த்திக்கிடம் எதற்காக பதட்டமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு கார்த்திக் இரவு 10.30 மணி அளவில் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு அம்மா படுத்து தூங்கும் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று பார்த்தபோது அம்மாவை காணவில்லை என்றும் சந்தையின் மேற்புறம் பகுதியில் சென்று பார்த்தபோது அம்மா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதாக கூறினார்.

    இதனையடுத்து வனிதா தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காய்கறி சந்தை மேற்பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் சாந்தா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது.

    இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சாந்தா தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். குடிபோதை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×