search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    நீர்மட்டம் 103.90 அடியை எட்டி மேட்டூர் அணை கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    • பாசனக்கால்வாய் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்பட 15 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    ஜூன் மாதம் 12-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220 நாள்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் திறக்கப்படும்.

    மேட்டூர் அணையில் 90 ஆண்டுகால வரலாற்றில் முதன் முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் 12-ல் 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக 11 ஆண்டுகள் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிற ஆண்டுகள் தாமதமாகவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது 90-வது ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மே மாதம் 12-ல் மேட்டூர் அணை நீர்மட்டம் 107.2 அடியாகவும் நீர் இருப்பு 74 டிஎம்சியாகவும் இருந்தது. நீர்வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதேபோல் தற்போதும் நீர் இருப்பு திருப்பதிகரமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும், நீர் இருப்பு 69.98 டி.எம்.சி.யாகவும், நீர் வரத்து 3088 கன அடியாகவும் உள்ளது.

    தற்போது டெல்டா பாசனக்கால்வாய் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தொடங்கிய தூர்வாரும் பணி நிறைவடைந்தால் மட்டுமே டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது. தவறினால் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

    கடந்த ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் 26 டிஎம்சி தண்ணீரும், கபினியில் 8.4 டிஎம்சி தண்ணீரும் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 13 டி.எம்.சி.யும், கபினியில் 4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. எனவே, நீர்வரத்து, நீர் இருப்பு பருவ மழையைக் கருத்தில் கொண்டு இன்னும் ஒருவார காலத்தில் தண்ணீர் திறக்கும் தேதியை நீர் வளத்துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

    Next Story
    ×