search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அங்கன்வாடி மையம் மீண்டும் அமைக்க வலியுறுத்தி இன்று கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
    X

    அங்கன்வாடி மையம் மீண்டும் அமைக்க வலியுறுத்தி இன்று கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

    • நீண்ட தூரத்தில் உள்ள இந்த மையத்துக்கு எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள நிச்சாம் பாளையம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார்கள்.

    அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்கள் குழந்தைகளை மையத்தில் விட்டு வந்தனர்.

    இதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அண்ணாநகர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைத்துக்கு தனி கட்டிடம் கட்டி அதில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    மேலும் கிராம சபை கூடங்களிலும் இது குறித்து அவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்திலும் அங்கன்வாடிக்கு சொந்த கட்டி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 15-ந் தேதி அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அண்ணாநகர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் திடீரென அந்த பகுதியில் பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையத்துக்கு அங்கன்வாடி மையம் மாற்றபட்டு உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள இந்த மையத்துக்கு எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும். எனவே எங்கள் பகுதிலேயே சொந்த கட்டிடத்தில் அரசு அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

    இது பற்றி தகவல் கிடைத்தும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் பெருந்துறை தாசில்தார் பூபதி மற்றும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. பவித்ரா மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தி நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×