search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிராம நிர்வாக அதிகாரி கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    லூர்து பிரான்சிஸ் (உள்படம்) - ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரை போலீசார் அழைத்து வந்தபோது எடுத்த படம்.

    கிராம நிர்வாக அதிகாரி கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

    • கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
    • வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆற்று மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு புகார் அளித்து வந்தார். கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீதும் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்துவது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் கடந்த 27.10.2022 அன்று ஒரு வழக்கும், 13.4.2023 அன்று மற்றொரு வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதனால் லூர்து பிரான்சிஸ் மேல் அவர்களுக்கு விரோதம் ஏற்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் ராமசுப்பிரமணியன் மீது 3 கொலை முயற்சி, சாராயம் காய்ச்சியதாக 5 வழக்குகள், வழிப்பறி உட்பட மொத்தம் 15 வழக்குகளும், மாரிமுத்து மீது மணல் திருட்டு உட்பட 6 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.

    இந்த கொலை வழக்கை முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் என்பவர் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரிக்கக்கூடாது என்றும், அதற்கு பதிலாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த மே மாதம் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 2 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 17-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து தூத்துக்குடி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து இருதரப்பினரிடமும் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு தீர்ப்பு கூறினார். அதில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தார்.

    வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் கொலை நடந்த 4½ மாதங்களில் தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×