என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேலூர் அருகே நள்ளிரவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்
    X

    பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்

    மேலூர் அருகே நள்ளிரவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்

    • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது.
    • வேன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததால் உள்ளே இருந்தவர்களை எளிதாக மீட்க முடியவில்லை.

    மேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் மாநாடு நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது50), வள்ளிமயில் (62), சிவநாதன் (49), ராஜகிருஷ்ணன் (48), செல்வராஜ் (25) உள்பட 19 பேர் ஒரு வேனில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றனர். மாநாட்டில் கலந்து கொண்ட பின் நேற்று இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி அங்குள்ள டோல்கேட் அருகில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு கம்பத்தின் மீது வேன் பயங்கரமாக மோதியது.

    அதே வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அருகில் இருந்த டோல்கேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் வேன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததால் உள்ளே இருந்தவர்களை எளிதாக மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னான்டி (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணிநேரம் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 19 பேரையும் 4 ஆம்புலன்சு மூலம் மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குமரன், வள்ளிமயில் உள்பட 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×