search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    கிருஷ்ணகிரியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர வெண்கல சிலையை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன்.
    • தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியை கண்டவர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில், நகர செயலாளர் நவாப்-நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவிற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சிவசங்கர், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல இடங்களில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவரால் வர முடியவில்லை.

    இருப்பினும் அவர், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை நினைத்து கொண்டே இருப்பார். கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன்.

    இந்த சிலையை என்னை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு தந்த கழக நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே கிருஷ்ணகிரி நகருக்கு இளைஞர் அணி கூட்டம், தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்தேன்.

    இன்று மீண்டும் உங்கள் அனைவரையும் கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியை கண்டவர். இந்த நன்னாளில் கலைஞரின் புகழை போற்றுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். நமது தலைவர் காட்டுபவர் தான் பிரதமர் ஆக உள்ளார். கலைஞரின் புகழ் ஓங்குக. இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    சிங்கமாக வீர நடைபோட்டவர் கருணாநிதி. அவருடன், 83 ஆண்டுகள் பயணித்தவன் நான். கோபாலபுரத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக விசுவாசியாக இருந்த நான் தூக்கி வளர்த்த உதயநிதியின் வளர்ச்சியை, வேகத்தை பாராட்டுகிறேன். அவருடைய பண்பாடு, அடக்கம் வாழ்த்துக்குரியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×