search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க இலங்கையில் இருந்து இழுவை கப்பல் இன்று வருகை
    X

    கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க இலங்கையில் இருந்து இழுவை கப்பல் இன்று வருகை

    • கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்று விட்டது.

    அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை மீட்கும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் மும்பை துறைமுக பகுதிகளில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்புப் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அதிக விசை திறன் கொண்ட இழுவை கப்பல்கள் வரும்போது, அவை கடல் பகுதியில் குறைவான தண்ணீரில் தரை தட்டிவிடும் நிலை இருக்கிறது என்பதால் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து கூடங்குளத்திற்கு வந்துள்ள அதே விசை திறன் கொண்ட இழுவை கப்பல் கொண்டு வரப்படுகிறது.

    இந்த கப்பலானது நேற்று இரவு நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தது. இன்று அந்த கப்பல் கூடங்குளத்திற்கு வந்து விடும். அதேநேரத்தில் இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம் அல்லது திடீரென கடல் உள்வாங்கலாம் என்றும், சில நேரங்களில் கடல் சீற்றமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதன் காரணமாக கொழும்புவில் இருந்து கொண்டுவரப்பட உள்ள மீட்பு கப்பல், சம்பவ இடத்திற்கு வரும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு கூடங்குளம் பகுதிக்கு அந்த கப்பல் கொண்டுவரப்பட்டு, நாளை காலையில் மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×