search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து விதிமீறல்: தமிழகம் முழுவதும் ரூ.2.11 கோடி அபராதம் வசூல்
    X

    போக்குவரத்து விதிமீறல்: தமிழகம் முழுவதும் ரூ.2.11 கோடி அபராதம் வசூல்

    • தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
    • விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்றுமுன்தினம் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    அதாவது பிரேக் லைட் எரியாத வாகனங்கள், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், அதிக அளவு சரக்கு ஏற்றிச்சென்ற வாகனங்கள், உரிமங்களை தவறாக பயன்படுத்தியது, உரிமங்களின் விதிமீறலுக்கு மாறாக செயல்பட்டது, உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வரி கட்டாமல் ஓடும் வாகனங்கள், காலாவதியான ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று புத்தகங்கள் இன்றி வாகனம் ஓட்டியது என பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 281 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 315 அளவிற்கு செலுத்தப்படாத வரிகள் கண்டறியப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளன.

    மேலும், விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் செலுத்தப்படாத வரிகள் மற்றும் அபராதத் தொகையை சேர்த்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 715 வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதிகபாரம் ஏற்றி வந்ததாக 389 வாகனங்களும், அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்ததாக 251 வாகனங்களும், உரிமம் இல்லாமல் வந்த 96 வாகனங்களும், வரி கட்டாமல் இயக்கப்பட்டதாக 135 வாகனங்களும், தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) இல்லாத 308 வாகனங்களும், உரிய காப்பீடு இல்லாத 312 வாகனங்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 295 வாகனங்களும், புகைச்சான்று இல்லாத 111 வாகனங்களும், பிரேக் லைட் எரியாத 267 வாகனங்களும் கண்டறியப்பட்டன. அவற்றில் 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திடீர் சோதனைகள் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடத்தப்படும்.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×