என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நரிக்குடி ஒன்றிய தலைவர் அதிரடி பதவி நீக்கம்- தமிழக அரசு நடவடிக்கை
- அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டார்.
- தீர்மானம் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவராக இருந்தவர் பஞ்சவர்ணம். நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.
இதில் 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 6 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் பஞ்சவர்ணத்துக்கு எதிராக 12 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து கையெழுத்திட்டனர்.
இந்த தீர்மானம் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சவர்ணத்திடமும் கலெக்டர் அறிக்கை பெற்றார். அதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லாத தீர்மான அறிக்கையை தமிழக அரசுக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.
அதனை பரிசீலித்த ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்-212 பிரிவின்படி நரிக்குடி ஒன்றிய தலைவர் பஞ்ச வர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.






