என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்
    X

    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

    • கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    • தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலம் உட்பட பல பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர்.

    கடந்த 7 நாட்களாக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொள்ளையில் மேலும் 6-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.70 லட்சம் பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.

    கைதான இருவரையும் வருகிற 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவண்ணாமலை டவுன் போலீசார் முடிவு செய்தனர். அதற்காக திருவண்ணாமலை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தனர்.

    காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே மீதமுள்ள கொள்ளையர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் ரூ.70 லட்சம் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளிவரும்.

    கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரியானா, ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில் மாடு திருடிய 2 பேரை காரில் வைத்து அப்பகுதி மக்கள் தீவைத்து எரித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதனால் அரியானா மாநிலத்தில் பதுங்கி உள்ள கொள்ளையர்களை பிடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×