search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி கோவிலில் படித்திருவிழா: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு
    X

    திருத்தணி கோவிலில் படித்திருவிழா: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு

    • முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆங்கில புத்தாண்டை யொட்டி காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்குள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

    திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளுக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி ஒவ்வொரு படிக்கும் தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட உள்ளது.

    மேலும் நாளை காலை 10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர் காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒவ்வொரு படிகள் தோறும் பக்தி பாடல் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர்.

    மேலும், ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு தரிசனம் மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. மேலும் மலைக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் மூலவரை தரிசனம் செய்வதற்கு வரிசை அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் மலைக்கோவிலுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் விடப்பட்டுள்ள பஸ்களில் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரில் வீரராகவர் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சிவா விஷ்ணு கோவில், திருப்பாச்சூர் வாசீஷ்வரர் கோவில், திருவா லங்காடு வடார ண்யேஸ்வரர் கோவில், காக்களூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துகு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவில்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. இங்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட உள்ளன. காஞ்சிபுரம் வரதரா ஜபெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசன செய்யலாம். வல்லக்கோட்டை முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருப்போரூர் முருகன் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலையிலிருந்து இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கென அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் திருக்கோயிலில் 1-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மீஞ்சூர் முப்பத்தி அம்மன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    Next Story
    ×