search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. பிரமுகர் உள்பட 4 பேர் படுகொலை: பல்லடத்தில் தொடர்ந்து பதற்றம்- கொலையாளி ஒருவர் கைது
    X

    பா.ஜ.க. பிரமுகர் உள்பட 4 பேர் படுகொலை: பல்லடத்தில் தொடர்ந்து பதற்றம்- கொலையாளி ஒருவர் கைது

    • கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார்.
    • கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் இன்று காலை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). இவர் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக உள்ளார்.

    நேற்றிரவு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து செந்தில்குமார், மோகன்ராஜ் , அவரது தாயார் புஷ்பவதி(67), புஷ்பவதியின் சகோதரி ரத்தினம்மாள்(58) ஆகியோரை வெட்டியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

    கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இதனால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக நெல்லையை சேர்ந்த குட்டி என்ற வெங்கடேசன் பணியாற்றி வந்துள்ளார்.

    இந்தநிலையில் செந்தில்குமாருக்கும், வெங்கடேசனுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வெங்கடேசனை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். இந்த பிரச்சினை காரணமாகவும், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையிலும் 4 பேர் கொலை நடந்தது தெரியவந்தது.

    இந்த வழக்கில் டிரைவர் வெங்கடேசனின் கூட்டாளி திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லமுத்து (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் இன்று காலை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொலையான மோகன்ராஜ் பா.ஜ.க. நிர்வாகி என்பதால் பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்களும் ஆஸ்பத்திரி முன்பு குவிந்துள்ளனர்.

    இதனால் பல்லடத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை கொலை செய்யப்பட்ட செந்தில்குமார், மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள், 4 பேர் உடல் பிரேத பரிசோதனைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கொலை நிகழ்ந்த பகுதியையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×