என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமானூர் அருகே நள்ளிரவு தோட்டத்து ஆட்டு கொட்டகையில் 2 பெண்டாட்டிக்காரர் வெட்டி கொலை
- மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
- கொலை செய்யப்பட்ட மணி சமீபத்தில் தனது இரண்டாவது மனைவிக்கு சொத்துகளை பாகப்பிரிவினை செய்து கொடுத்ததாக கூறப்பட்டது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கரையான் குறிச்சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 63). 2 பொண்டாட்டிக்காரர். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து கால்நடைகள் வளர்த்து வந்தார்.
இவரின் முதல் மனைவி ராணிக்கு (55) ராஜேஷ் என்ற ஒரு மகனும், இரண்டாவது மனைவி பிரேமாவுக்கு (50) பிரதீஷ் ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இரு மனைவிகளும் கரையான் குறிச்சியில் எதிரெதிர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
வழக்கமாக மணி மாலையில் வாரணவாசி பிள்ளையார் கோவில் கீழ்ப்புறம் உள்ள தனது தோட்டத்துக்கு செல்வார். பின்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு கால்நடைகளை அங்குள்ள கொட்டகையில் அடைத்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புவார். நேற்று மாலை தோட்டத்துக்கு புறப்பட்டு சென்ற மணி வீடு திரும்ப வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த 2-வது மனைவி பிரேமா அதிகாலை மகனுடன் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது ஆட்டு கொட்டகை முன்பு அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து பிரேமா கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் சம்பவ இடத்தில் துப்பறியும் நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை நடத்தினார்.
கொலை செய்யப்பட்ட மணி சமீபத்தில் தனது இரண்டாவது மனைவிக்கு சொத்துகளை பாகப்பிரிவினை செய்து கொடுத்ததாக கூறப்பட்டது. ஆகவே சொத்து தகராறு காரணமாக மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.2 பெண்டாட்டிக்காரர் நள்ளிரவு தோட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






