search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்- வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
    X

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு

    ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்- வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    • தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும்.
    • இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர் ஊரக வளர்ச்சித்துறை பணிகளில் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே 3 தடவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அப்பாவு எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

    அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.வி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்த பணிகளை அரசு விதிகளுக்கு மாறாக தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாக தெரிய வந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விதிமுறைகளை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து எந்தெந்த இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி பகுதிகளில் 7 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.

    எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் திட்டமிட்டு 4-வது முறையாக சோதனை நடத்தப்படுவதாக அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரணை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அந்த தனியார் மருத்துவ கல்லூரி உள் நோயாளி படுக்கை வசதியுடன் 2 வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்றும் விஜயபாஸ்கர் அனுமதி வழங்கி உள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டு பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் தலா 1 இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும். ஆனால் இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள் என மொத்தம் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முற்றுகையிட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த 39 இடங்களிலும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைக்குமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

    Next Story
    ×