search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வறண்டு வரும் வீராணம் ஏரி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்
    X

    வறண்டு வரும் வீராணம் ஏரி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்

    • கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
    • வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் வீரநாராயணன் ஏரி நாளடைவில் வீராணம் ஏரியாக மாறி விட்டது. இந்த ஏரி லால்பேட்டையில் அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

    5 கிலோ மீட்டர் அகலம் உடைய இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. 1461 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரியில் 34 மதகுகள் உள்ளன. இதனால் இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும் இருப்பினும் ஏரியை முழுமையாக தூர்வாராததால் ஏரியின் மட்டத்தில் சற்று வேறுபாடுகள் இருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

    இருப்பினும் பிரதான நீர் வடவாறு வழியாகவே வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.

    கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 2004-ம் ஆண்டிலிருக்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 65 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஏரி கடந்த ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதனால் வீராணம் ஏரியை நம்பியுள்ள விளைநிலங்களில் கடந்த ஆண்டு 3 போகமும் பயிரிடப்பட்டது. மேலும், சென்னைக்கு குடிநீரும் தங்கு தடையின்றி சென்றது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏரி ஒரு முறைகூட நிரம்பவில்லை. இதற்கு போதிய மழை இல்லை என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது. அதேசமயம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் துர்ந்து போயுள்ளதே காரணமென விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீராணம் ஏரி வறண்டது.

    இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது. ஏரியின் நீர்மட்ட அளவான 47.50 அடியில் தற்போது 20.50 அடி நீர் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஏரியின் கரைப்பகுதியில் மட்டுமே நீர் உள்ளது. ஏரியின் மையப்பகுதி வறண்டு புல் மற்றும் பூண்டு செடிகள் முளைத்துள்ளன. மேலும், மேடாக உள்ள வீராணம் ஏரிக்கரை ஓரங்களும் வறண்டு வருகின்றன.

    இதனால் நடப்பு சம்பா பயிரிட போதுமான நீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களை நாற்று விட்டு நடவு செய்துள்ள நிலையில் வீராணம் ஏரி வறண்டு வருவது விவசாயிகளிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீராணம் ஏரி நீர் கிடைக்கவில்லை எனில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயமும் உள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு நாளொன்றுக்கு 30 கனஅடி குடிநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது.

    இதே நிலை நீடித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் வீராணம் ஏரி முழுமையாக வறண்டு போய்விடும். இதனால் நடப்பு சம்பா பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, சென்னையில் குடிநீர் பிரச்சனை உருவாகும் சூழலும் உருவாகியுள்ளது.

    Next Story
    ×