search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படுமா?
    X

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படுமா?

    • வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.
    • நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக் காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த நிலையில் சிதம்பரம் நீர் வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கீழணையில் வடவாறு வழியாக தண்ணீரை அனுப்பி வைத்து ஏரியை நிரப்பினர். இதன் மூலம் ஏரி 47.50 அடி முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையிலும், கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட சூழலிலும் கீழணையில் தேக்கி வைத்த தண்ணீரை கொண்டு தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இருந்து நீர் வரத்து இல்லாத சூழ்நிலையில் மேட்டூர் அணை கடந்த வாரம் மூடப்பட்டது. இதனால் கீழணைக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது கீழணையில் 6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 115 கன அடியும், வடவாற்றில் வினாடிக்கு 203 கன அடியும் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வடவாற்றில் விடும் தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து இறைத்து வருவதால் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல் வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.

    நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது. இதில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 42 கன அடியும், பாசன வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்துக்கு வினாடிக்கு 106 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. நீர் வரத்து இல்லாத நிலையில் சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழல் உருவாகும்.

    கீழணையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் வடலூரில் இருந்த பண்ருட்டி வரை உள்ள 100-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தண்ணீரை சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள் வழியாக செலுத்தி கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்பட்ட போது என்.எல்.சி. சுரங்க நீரை பெற்று லாரி மூலம் சென்னைக்கு எடுத்து செலப்பட்டது.

    எனவே அடுத்தடுத்து ஏற்படும் நெருக்கடியை கொண்டு சென்னை குடிநீரின் தேவைக்காக இந்த 2 கட்ட பணிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (மெட்ரோ வாட்டர்) முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×