search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    படிப்படியாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்
    X

    படிப்படியாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்

    • வீராணம் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    • ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடைமடை டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    பாசன வசதிக்காக பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 32 மதகுகள் உள்ளது. இந்த ஏரியை நம்பி கடைமடை டெல்டா பாசன பகுதியான காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.

    டெல்டா பாசன பகுதியான கந்தகுமரன், நெடுஞ்சேரி, புத்துார், கண்ணங்குடி, மதுராந்தகநல்லுார், பன்னப்பட்டு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் ஆடி மாதத்தில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

    மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து தற்போது இல்லாத நிலையில், கடும் வெயிலால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. சென்னைக்கு 454 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது முளைவிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், தண்ணீர் திறப்பதை திடீரென ஒத்தி வைத்தனர். இதனால், ஆவலுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    வேறு வழியின்றி நெற்பயிர்கள் கருகிய பகுதிகளில் விவசாயிகள் மறு உழவு செய்து விதைப்பு செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் கருகி வருவதை தடுக்க நேரடி நெல் விதைப்பிற்கு விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×