என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கார் வெடிப்பு சம்பவம் பற்றி மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?- வானதி சீனிவாசன்
    X

    கார் வெடிப்பு சம்பவம் பற்றி மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?- வானதி சீனிவாசன்

    • திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?
    • ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இன்று பாரதிய ஜனதாவினர் சிறப்பு பூஜை நடத்தினர். கோவையை காத்த ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி இந்த பூஜையை அவர்கள் நடத்தினர்.

    பூஜையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்கள் கோவிலில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு இறைவன் அருளால் மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதால் இன்று வழிபாடு நடத்தினோம். நூற்றுக்கணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது.

    சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை. கோவைக்கும் வரவில்லை. இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்ந்து வந்திருக்க வேண்டாமா?

    போலீஸ் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசி இருக்க வேண்டாமா?

    இந்த சம்பவம் பற்றி அவர் இதுவரை பேசாதது, மவுனமாக இருப்பது கோவையை பழி வாங்கும் நோக்குடன் இன்னும் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது. உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்திருக்கின்றது.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் கோவைக்கு வர வேண்டும். கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் சரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். இப்போது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என களத்தில் இறங்க வேண்டும்.

    திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?

    ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்-அமைச்சர் கவுரவம் பார்க்க கூடாது.

    சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களை பற்றி தீர விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இன்று பா.ஜ.க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×