search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டை இலை சின்னம் கேட்டு வழக்கு: எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு பதில் அளிக்க ஓ.பி.எஸ். தீவிரம்
    X

    இரட்டை இலை சின்னம் கேட்டு வழக்கு: எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு பதில் அளிக்க ஓ.பி.எஸ். தீவிரம்

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.
    • இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது.

    இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

    இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.

    இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதுபற்றி ஓ.பன்னீர் செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அணியினர் இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று தெரிந்து விட்டது.

    அப்படியென்றால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எங்கள் வசம்தான் இரட்டை இலை சின்னம் உள்ளதாக கருத வேண்டி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தொடர்பான நோட்டீசு எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. வந்தாலும் பதில் அனுப்பப்படும்.

    இதற்காக எங்களது மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×