search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண திட்டம்... முழு விவரம்
    X

    தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண திட்டம்... முழு விவரம்

    • கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    சென்னை:

    அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூஜைகள் இப்போது நடைபெற்று வருகிறது. ஆகமவிதி பூஜையான 'அனுஷ்தான்' எனப்படும் சிறப்பு பூஜைகள் கும்பாபிஷேக நாளான 22-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

    நாசிக் நகரில் புனித காலாராம் கோவிலில் 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

    நேற்று ஆந்திர மாநிலம் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இன்று கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.


    இதேபோல் ஒவ்வொரு முக்கிய வைணவ தலங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிலும் 3 நாட்கள் இருந்து வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் வருகிற 19-ந் தேதி மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பை பெற்றுக் கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் தளத்துக்கு வந்திறங்குகிறார்.

    பின்னர் கார் மூலம் நேரு ஸ்டேடியம் சென்று 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், 1,600 பயிற்சியாளர்கள், 1000 நடுவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு வகை போட்டிகளும் இதில் இடம் பெறுகிறது.

    நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

    விழா நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். அங்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுகின்றனர்.

    அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்து இதில் பேசப்படும் என தெரிகிறது.

    மறுநாள் (20-ந்தேதி) காலை பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து காலை 9.25 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்கிறார். பின்னர் கார் மூலம் பகல் 11 மணியளவில் ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.

    அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் 11 மணி முதல் 12.40 மணி வரை இருக்கிறார். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ராமேசுவரம் புறப்படுகிறார்.

    ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.10 மணிக்கு ராமேசுவரம் செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன் பிறகு கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார்.

    அன்று இரவு ராமேசுவரத்தில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.

    மறுநாள் (21-ந்தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.

    அதன் பிறகு கார் மூலம் அரிச்சல் முனை பகுதிக்கு செல்கிறார். 10.25 மணியளவில் அங்குள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பூஜையிலும் பங்கேற்கிறார். காலை 11.25 மணி வரை கோவிலில் இருக்கிறார்.

    பின்னர் கடலில் புனித தீர்த்தங்களை சேகரிக்கிறார். அந்த புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்து பின்பு மதியம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் மத்திய-மாநில அரசின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் லோவ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர், நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி. உள்பட போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதே போல் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேசுவரத்திலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    Next Story
    ×