search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை மறுநாள் முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்- கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்
    X

    நாளை மறுநாள் முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்- கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

    • மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.
    • 100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும். சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பகுதிகளுக்கு 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.

    அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கீழ்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு செல்லும் அரசு பேருந்துகள் வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை அருகில் நிறுத்தப்படும். மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட், இ-ரோட்டில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, பி-ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை, (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

    மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.

    100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் இ.வி.ஆர். சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-வது அவென்யூ, 2-வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.

    கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள தனியார் வாகனங்கள் இ.வி.ஆர். சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-வது மெயின் ரோடு, 2-வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதேபோல் வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் ஈ.சி.ஆர், மற்றும் ஓ.எம்.ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக என்.எச். 45 செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×