search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
    X

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

    • அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

    நெல்லை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் இதமான சூழ்நிலை விலவி வருகிறது.

    இதேபோல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில், புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ராமநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்று 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி அதிகரித்து இன்று 33 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 28.50 அடியாக உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 25.25 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 30 மில்லிமீட்டரும், ராமநதி, கடனா நதியில் தலா 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில், இன்று 3 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பெய்துவரும் சாரல் மழை விவசாயத்திற்கு கை கொடுக்காவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    அதேநேரத்தில் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பார்கள். ஆனால் போதிய மழை இல்லாததால் 1 மாதம் தாமதமாகி விட்டது. எனவே மழை தீவிரம் அடைந்தால் இந்த மாதத்திலாவது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சாலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநகரில் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குடைபிடித்தபடி சென்றனர்.

    Next Story
    ×