search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயிலில் நாய், பூனைகளை அழைத்து செல்ல வசதி- தெற்கு ரெயில்வே ஏற்பாடு
    X

    ரெயிலில் நாய், பூனைகளை அழைத்து செல்ல வசதி- தெற்கு ரெயில்வே ஏற்பாடு

    • நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது.
    • நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும்.

    சென்னை:

    ரெயில்வேயில் உள்ள வசதிகள், ரெயில்கள் இயக்கம், தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கும் வகையில் 'உங்கள் ரெயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் தெற்கு ரெயில்வே தகவல்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள், விலங்குகள், பறவைகளை ரெயிலில் எடுத்து செல்வதற்காக உள்ள வசதிகள் குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    யானை, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, நாய் உள்ளிட்ட பிற விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை ரெயில்களில் ஏற்றிச் செல்லலாம். அவற்றை ஏற்றிச்செல்வதற்கான விவரங்களை ரெயில் நிலையங்களில் பெறலாம்.

    மற்ற விலங்குகளை விட வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை பயணிகள் ரெயில்களில் தங்களுடன் அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். செல்லப் பிராணியான நாய்களை முதல் ஏசி வகுப்பிலும், ரெயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ் லக்கேஜ் மற்றும் பிரேக் வேனில் எடுத்துச் செல்லவும் பதிவு செய்யலாம்.

    பயணிகள் தாங்கள் பயணிக்கும் பெட்டியில் நாயை அழைத்துச் செல்ல ஏசி முதல் வகுப்பு, கூபே தங்குமிடத்தை பிரத்தியேகமாக முன்பதிவு செய்ய வேண்டும். பயணியின் ஒரு டிக்கெட்டில் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக கட்டணமும் வசூலிக்கப்படும்.

    ரெயில் புறப்படுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு நாயை லக்கேஜ் அல்லது பார்சல் அலுவலகத்துக்கு அழைத்து வர வேண்டும். பொது பயணிகள் பெட்டிகளில் நாயை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறையாக முன்பதிவு செய்யாமல் நாய்களை ஏற்றிச்சென்றால் 6 மடங்கு லக்கேஜ் கட்டணம் விதிக்கப்படும்.

    எந்த தொற்று நோய்களாலும் நாய் பாதிக்கப்படவில்லை என்று கால்நடை மருத்துவரிடம் பயணத்திற்கு 24 மணி முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு சான்றிதழ் பெற வேண்டும். முன்பதிவு செய்யும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

    நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது. நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும்.

    அனைத்து ரெயில்பெட்டிகளிலும் நாய்களை கூடைகளில் எடுத்து செல்லலாம். அதற்காக பயணிகள், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் சரியான அடையாள சான்று வைத்திருக்க வேண்டும்.

    நாயை ஏற்றி பெட்டிக்குள் அடைக்கும் முன்பு அதன் உரிமையாளர் நாயை வாய் காப்புடன் சரியாக சங்கிலியால் பிணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    Next Story
    ×