search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
    X

    சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

    • மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
    • அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் சேவைத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க மண்டல வாரியாக குறுகிய கால ஒப்பந்தம் மூலம் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் சாலை வெட்டுக்கள் முடிக்கப்பட உள்ள இடங்களில் சீரமைக்கப்படவுள்ள 140 சாலைகளிலும் மற்றும் சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 277 சாலைகளிலும் அக்டோபர் 10-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்; இதுதவிர வேறு எந்த சாலை வெட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

    மேலும், கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், சேவைத் துறையினரால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதை சிறந்த முறையில் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மண்டலம்-2 நெடுஞ்செழியன் சாலையில் வாரியத்தின் மீதமுள்ள 100 மீட்டர் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; அனைத்து பஸ் தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை புதிய சாலை வெட்டுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்; சாலை சீர் அமைக்கும் பணிக்கு கொண்டுவரும் வாகனங்களுக்கு பகல் நேரங்களில் போக்குவரத்து துறையில் அனுமதி அளிக்க வேண்டும்; எருக்கஞ்சேரி சாலையில் மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா வரை மேற்கொள்ளப்படும் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

    மேலும், முகலிவாக்கம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அவை முடிக்கப்பட்ட இடங்களில் சாலை பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; ஆற்காடு சாலை, ஓஎம்ஆர் சாலை சீரமைக்கும் பணிகள், கொட்டிவாக்கம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

    நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், 100 அடி உள்வட்ட சாலையில் மேற்கொண்ட சாலைவெட்டு பணிகள் முடிவடைந்ததாகவும், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×