search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- பள்ளி தாளாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    X

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- பள்ளி தாளாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    • பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை தாளாளர் மகன் வினோத் நிர்வாகித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகி வினோத், பிளஸ்-2 மாணவிகளிடம் பாடம் சம்பந்தமாக கவுன்சிலிங் இருப்பதாக தனியாக அழைத்து பேசி வந்ததாக தெரிகிறது. அப்போது அவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த வாரம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நிர்வாகி வினோத் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி மாணவி தோழிகளிடம் கூறியபோது இதே போல் அவர் மேலும் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகி வினோத்தின் செயல் குறித்து தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவிகளுக்கு எதிராக நிர்வாகி வினோத்தின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் பள்ளி தாளாளர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவிகளின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பள்ளி அருகே சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்ததும் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளின் பெற்றோரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை வலியுறுத்தி அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, "பள்ளி நிர்வாகி வினோத் பல மாணவிகளை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருப்பதாக" சரமாரியாக குற்றம்சாட்டினர். பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகி வினோத் பள்ளியில் இல்லை. அவர் வெளியூர் சென்று இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் திருநின்றவூர் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

    இந்நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×