என் மலர்
தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி- நோய் பாதிப்பால் விபரீத முடிவு
- மாரியப்பன் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதால் பாக்கியகோமதி தனது தாய் வீட்டில் மகனுடன் இருந்து வருகிறார்.
- தாய் மற்றும் அவரது மகள் பாக்கியகோமதி இருவருமே பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேர்மன். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 1 வருடத்திற்கு முன்பு இவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி ஞானபாக்கியம்(வயது 65). இவர்களுக்கு பாக்கியகோமதி (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு வேடசந்தூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 7 வயதில் முத்து செல்வகோமு என்ற ஒரு மகன் உள்ளார்.
மாரியப்பன் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதால் பாக்கியகோமதி தனது தாய் வீட்டில் மகனுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தாய் மற்றும் அவரது மகள் பாக்கியகோமதி இருவருமே பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். நேற்று இருவருக்கும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். இதற்கிடையே இன்று காலை எழுந்து பார்த்தபோது சேர்மன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் ஞானபாக்கியம், பாக்கியகோமதி, அவரது மகன் முத்து செல்வகோமு ஆகிய மூவரும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.