search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பின்னடைவு? ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி
    X

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பின்னடைவு? ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

    • அ.தி.மு.க. தலைமையை கைப்பற்றும் போட்டியில் இ.பி.எஸ். வெற்றி பெற்று கட்சியின் பொதுச்செயலாளராகி விட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் எம்.பி.யாக இருந்ததால் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களை எளிதில் அணுக முடிந்தது.

    சென்னை:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    ரவீந்திரநாத் எம்.பி.யாக பதவி ஏற்ற சமயத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுக்க உள்துறை மந்திரி அமித்ஷா மூலம் ஓ.பன்னீர்செல்வம் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதற்கு முட்டுக்கட்டை போட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் போது உங்கள் மகன் மத்திய மந்திரியாக அ.தி.மு.க.வில் யாரும் சம்மதிக்கமாட்டார்கள். வேண்டுமானால் வைத்திலிங்கத்துக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கலாம். இல்லையென்றால் நீங்கள் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் மகனை மத்திய மந்திரியாக்குங்கள் என்றார்.

    இதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதால் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனால் மத்திய மந்திரியாக முடியவில்லை. ஆனாலும் பாராளுமன்றம் நடைபெறும் சமயங்களில் அ.தி.மு.க.வில் இவர் ஒருவர் மட்டுமே எம்.பி.யாக இருந்ததால் தினமும் இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் தினசரி தனது கருத்துக்களை பேசி வந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பிரிவு ஏற்பட்ட போது ரவீந்திரநாத் எம்.பி.யை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். ஆனாலும் அவரது எம்.பி.பதவி பறி போகவில்லை.

    ரவீந்திரநாத் எம்.பி. மட்டுமே அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை.

    இந்த நிலையில் தான் இப்போது ஐகோர்ட்டு ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளது. இது ரவீந்திரநாத் அரசியல் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    ஏனென்றால் அ.தி.மு.க. தலைமையை கைப்பற்றும் போட்டியில் இ.பி.எஸ். வெற்றி பெற்று கட்சியின் பொதுச்செயலாளராகி விட்டார். தலைமைக் கழகம், இரட்டை இலை சின்னம் ஆகியவையும் இ.பி.எஸ். வசம் உள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்று இன்னும் சொல்லிக் கொண்டாலும் தலைமைக் கழகம் பக்கம் அவரால் செல்ல முடியவில்லை. அவரது சட்டப் போராட்டம் இதுவரை தோல்வியில் தான் முடிந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் எம்.பி.யாக இருந்ததால் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களை எளிதில் அணுக முடிந்தது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரையும் ரவீந்திரநாத் எம்.பி. எளிதில் சென்று பார்த்து பேச முடிந்தது.

    ஆனால் இப்போது எம்.பி. பதவி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் தேர்தலிலும் நின்று அவர் வெற்றி பெற முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

    ஏனென்றால் அவரது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளதால் சட்ட சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

    இது அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பு அவருக்கு மட்டுமல்ல அவரது தந்தையான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கருத்து தெரிவித்தார்.

    Next Story
    ×