search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடியாத வெள்ளம்: குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    வடியாத வெள்ளம்: குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    • தமிழக அரசு திட்டமிட்டு செயல் பட்டிருந்தால் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றாலும், குறைத்திருக்கலாம்.
    • 50 சதவீத பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நேற்று கரையைக் கடந்த மிச்சாங் புயல் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மிச்சாங் புயல் குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் சென்னையின் சில பகுதிகளில் முதல் 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக 29 செ.மீயும், 48 மணி நேரத்தில் 49 செ.மீயும் மழை பெய்துள்ளது. இது ஒப்பீட்டளவில் அதிக மழை தான் என்றாலும் கூட, சமாளிக்க முடியாத மழை அல்ல. கடந்த காலங்களில் இதைவிட கூடுதலான மழை சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும் பெய்திருக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டு செயல் பட்டிருந்தால் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றாலும், குறைத்திருக்கலாம்.


    ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப் பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை.

    சென்னையின் பெரும் பான்மையான பகுதிகளில் மழை-வெள்ளம் வடியாததால் 50 சதவீத பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. பல பகுதிகளில் இன்னும் தொலை தொடர்பு இணைப்பு சீரமைக்கப்படவில்லை. மழை-வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்ட மூத்த குடிமக்கள் இதுவரை மீட்கப்படவில்லை. அத்தகைய சூழலில் உள்ள மக்கள் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

    மழை மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.


    சென்னையில் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இயல்பு நிலையை திரும்பச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×