search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெருமழை வெள்ளத்தால் 4-வது நாளாக அவதி: காயல்பட்டினம், புன்னக்காயலில் பொதுமக்கள் தவிப்பு
    X

    பெருமழை வெள்ளத்தால் 4-வது நாளாக அவதி: காயல்பட்டினம், புன்னக்காயலில் பொதுமக்கள் தவிப்பு

    • தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது.
    • 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது.

    இதில் காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் மட்டும் உச்சபட்சமாக 92.3 சென்டி மீட்டர் அளவிலான மழை பொழிந்து தள்ளியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெய்த இந்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் காயல்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    2 நாட்களாக இங்கு முற்றிலுமான மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்ட மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

    இதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு 3-வது நாளான நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரியில் 3-வது நாளாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டும் உள்ளன.

    மேலும் இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலைகளும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு ஆத்தூர், புன்னகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மூலக்கரை, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகள் தனித்தனி தீவுகளை போல காணப்படுகின்றன.

    பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவினர்களின் நிலைமையை கூட அறிந்து கொள்ள முடியாத அவல நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தாமிரபரணி ஆற்றின் கிளைகளுக்கு இடையில் தீவு போல உள்ள புன்னக்காயல் தற்போதைய வெள்ளம் காரணமாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.

    ஆத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல், தலைவன் வடலி ஆகிய கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. அங்கு தத்தளித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு ஆறுமுகநேரியில் 2 பள்ளிகளிலும் 3 திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களில் இருந்தும் அபரிமிதமாக வெளியேறிய தண்ணீரால் மேலத்தெரு, காமராஜபுரம், சீனந்தோப்பு ஆகிய பகுதிகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் உணவுக்கு வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஊர்களுக்கும் எவ்வித போக்குவரத்தும் இல்லாததால் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஆகிவிட்டன. இதனால் அடுத்தடுத்த நாட்களுக்கான தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்கிற பரிதவிப்பு நிலையில் மக்கள் உள்ளனர்.

    காயல்பட்டினம் பகுதியில் தரைதள வீடுகள் பெரும்பாலாக மூழ்கி விட்டன. அங்கு பெரும் சுகாதார கேடு உருவாகும் நிலை உள்ளது. காயல்பட்டினம் பகுதி நிலைமையை விளக்கி போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறவும் நிவாரண உதவிகளை வழங்கவும் வலியுறுத்தி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை இன்று சந்தித்து பேச இருப்பதாக 'மெகா' அமைப்பின் நிர்வாகியான முகம்மது சாலிக் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×