search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம்

    • தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபையிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராகுல் காந்தியின் பதவி பறிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

    சென்னை:

    மோடி பெயர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபையிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சட்டமன்ற காங்கிரஸ் தலைவரான செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். இதற்காக பஸ்சில் வந்தபோதே பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டே இருந்தனர்..

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்து வந்த பதாகைகளில் ராகுல் காந்தியின் படம் இடம் பெற்று இருந்தது. ராகுல் சாவர்க்கர் அல்ல, காந்தி. 'தமிழகம் உங்கள் பின்னால் நிற்கிறது' என்பது போன்ற வாசகங்கள் பதாகையில் இடம் பெற்றிருந்தது.

    இன்றைய சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் சட்டசபைக்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இது தொடர்பாக செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. சட்டசபை வளாகத்தில் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    ராகுல் காந்தியின் பதவி பறிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று இரவு சட்டசபைக்குள்ளேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    அதானி பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசி வந்ததற்காகவே அவரது பதவியை பறித்து உள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.

    24 நாளில் விசாரணை முடித்து தீர்ப்பு கூறியுள்ளனர். 24 மணி நேரத்தில் ராகுலை தகுதி நீக்கம் செய்துள்ளனர். ஹிட்லர், முசோலினி ஆட்சியை விட மோடியின் ஆட்சி மோசமாக உள்ளது. சட்டசபைக்குள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். எங்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×