என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போலீஸ்காரரை நடுரோட்டில் கத்தியைகாட்டி விரட்டிய கஞ்சா போதை வாலிபர்கள் 3 பேர் கைது
- நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டினர்.
- காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் திருமாவளவன் என்பவர் கோவில் திருவிழாவிற்கு வந்து இருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 3 வாலிபர்கள் திருமாவளவனிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியால் வெட்டி பணத்தை பறித்தனர்.
இதில் காயம் அடைந்த திருமாவளவன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்து போலீஸ்காரர் சரவணன் சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரிக்க வந்தார்.
அவர் கஞ்சா போதையில் நின்ற வாலிபர்களிடம் வழிப்பறி செய்தது குறித்து விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவரை குத்துவது போல் விரட்டினர்.
கையில் லத்தி இருந்தும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சரவணன் அவர்களிடம் இருந்து பின்வாங்கினார். உடனே அவரை கத்தியை காட்டி மிரட்டியபடியே போதை வாலிபர்கள் ஓட ஓட விரட்டினர். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கஞ்சா போதை வாலிபர்கள் போலீஸ்காரரை நடுரோட்டில் கத்தியை காட்டி மிரட்டி விரட்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்தவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கிடையே போலீஸ்காரரை மிரட்டியது தொடர்பாக காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






